எஸ்பிபி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு..!!

சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் சனிக்கிழமை (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், இறுதி நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று இந்திய அரசும், தமிழக அரசும் ஏற்கெனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் இன்று ஆயிரக்கணக்கில் எஸ்.பி.பியின் ரசிகர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்த வந்ததால் கூட்டத்தை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், அங்கு தொடர்ந்து எஸ்.பி.பியின் உடலை வைத்திருக்காமல் அவரது இறுதிநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு எஸ்.பி.பி குடும்பத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, அவரது உடல் வெள்ளிக்கிழமை 7.45 மணிக்கு அவசரஊர்தி வாகனம் மூலம் தாமரைப்பாக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

வழி நெடுகிலும் எஸ்.பி.பி ரசிகர்கள், அவரது உடலை சுமந்து சென்ற அவசர ஊர்தி வாகனத்தை செல்பேசிகளில் பதிவு செய்தபடி காணப்பட்டனர்.

திருவள்ளூர் காவல்துறை கட்டுப்பாடு

இந்த நிலையில், எஸ்.பி.பி உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை பொதுமக்கள் வர வேண்டாம் என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் எஸ்.பி.பியின் இறுதி நல்லடக்கம் அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே