Detailed Report : இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி?

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்துக்கான காரணமும் விபத்துக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை – அனிருத், ஒளிப்பதிவு – ரத்னவேலு.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. பிறகு ஹைதராபாத், ராஜமுந்திரி சிறைச்சாலை, போபாலில் படப்பிடிப்பு நடைபெற்றது. 

தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

கமல் ஹாசனின் காலில் சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.

தற்போது கமல் குணமடைந்து சென்னை பூந்தமல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

பூந்தமல்லி அருகே உள்ள இ.வி.பி. பொழுதுபோக்குப் பூங்காவில் அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை நடைபெற்ற படப்பிடிப்பில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் போன்றோர் தொடர்புடைய காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் ஷங்கர்.

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்றைய படப்பிடிப்பின்போது ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.

இதில் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா (34), மது (29), சந்திரன் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் இருந்த ஒரு பெண் உள்பட 9 பேர் காயமடைந்தார்கள். உடனே அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து லைகா நிறுவனமும் கமலும் ட்வீட் செய்து தங்களுடைய வருத்தங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நசரத்பேட்டை காவல்துறையினர் கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை ஏற்படுத்துதல், உபகரணங்களைத் தவறாகக் கையாண்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

கிரேன் ஆபரேட்டர் ராஜன் தலைமறைவாகிவிட்டதால் அவரைக் காவலர்கள் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த நான்கு நாள்களாக அந்த அரங்கில் சண்டைக்காட்சிகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

நேற்று மாலை வரை எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு இரு ஷாட்களைப் படமாக்கிய ஷங்கர், மீதமுள்ள ஒரு ஷாட்டைப் படமாக்கத் தயாராக இருந்தார்.

காட்சியைப் படமாக்குவது குறித்தும் லைட்டிங் குறித்தும் ஷங்கரும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலும் விவாதித்து, காட்சிக்கான ஒத்திகையைக் கவனித்துள்ளார்கள்.

கிரேன் கீழே விழுந்த இடத்துக்கு அருகில் தான் ஷங்கர், அடுத்தக் காட்சிக்கான வேலைகளைக் கவனித்துள்ளார்.

கமல் ஹாசன், காஜல் அகர்வால், காஸ்டியூம் டிசைனர் அம்ரிதா ராம், ஸ்டைலிஸ்ட் சீமா மற்றும் ஹாலிவுட் மேக்அப் மேன் ஆகியோர் மானிட்டரில் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

மானிட்டர் பார்ப்பதற்கென சிறிய கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

கமல் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் அந்த இடத்தில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பிட்ட காட்சியில் நடிக்க நிறைய ஜுனியர் நடிகர்கள் தேவைப்பட்டதால் அவர்களும் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

படப்பிடிப்புத் தளத்தில் பிரமாண்ட விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த விளக்குகளைத் தூக்குப் பிடிக்க ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று நடந்த விபத்தின்போது கிரேனை இயக்கியவர், சரியாக இயக்காததால், ஒரு பக்கம் எடை கூடி கிரேன் கீழே விழுந்து 3 பேரைப் பலி கொண்டுள்ளது.

கிரேன் விழுந்த சத்தம் கேட்டு அருகில் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்த படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் தெறித்து ஓடியிருக்கிறார்கள்.

பிறகுதான் என்ன ஆனது என்று அருகில் வந்து பார்க்கும்போது பலரும் கிரேனில் சிக்கியது தெரிந்துள்ளது.

உடனடியாகக் காயமடைந்தவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல கமலும் ஷங்கரும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

கமல், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் இந்த விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்கள்.

மயிரிழையில் உயிர் பிழைத்து, இந்த ட்வீட்டை டைப் செய்துவருகிறேன். அந்த ஒரு நொடி தான்.

நேரம் மற்றும் வாழ்க்கையின் மகத்துவம் குறித்து நிறைய கற்றுக்கொண்டேன் என்று ட்வீட் செய்துள்ளார் காஜல் அகர்வால்.

காஸ்டியூம் டிசைனர் அம்ரிதா ராம் தன்னுடைய ட்வீட்டில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளேன்.

10 நொடிகளில் கிரேனுக்குக் கீழே நசுங்கியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

கிரேன் விழுந்த இடத்தில் சில நொடிகளுக்கு முன்பு அங்கே நின்றுகொண்டிருந்தேன். நான் எப்படித் தப்பித்தேன் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்கிறார்.

இந்தியன் 2 படப்பிடிப்புத்தளத்தில் விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் உடனே வெளியே பரவியுள்ளது.

கமல் உள்ளிட்ட படக்குழுவினரின் குடும்ப உறுப்பினர்கள் செல்போன் வழியாக நலம் விசாரிக்க அழைத்துள்ளார்கள்.

ஆனால் படப்பிடிப்புக் குழுவினர் போனில் மூழ்காமல், காயமடைந்த ஊழியர்களைப் பாதுகாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்கள்.

ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம். நாமே காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என அனைவரையும் துரிதப்படுத்தியுள்ளார் கமல்.

படப்பிடிப்புத்தளத்தில் பல விபத்துகளை நேரில் பார்த்தவர் என்பதால் அவரால் சரியான ஆலோசனைகளை வழங்க முடிந்துள்ளது.

இதனால் காயமடைந்தவர்கள் சில நிமிடங்களில் பல்வேறு வண்டிகள் மூலமாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

கிரேன் கீழே விழுந்த சமயம் காட்சிகளைப் படமாக்காததால் பலருடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

ஏற்கெனவே செட் அமைக்கப்பட்டு, நான்கு நாள்களாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் இதுபோல விபத்து ஒன்று நடக்க வாய்ப்புண்டு என்று யாருமே கருதியிருக்க முடியாது.

விபத்தில் இறந்த பிரபல கார்ட்டூனிஸ்டின் மதனின் மருமகன் ஸ்ரீ கிருஷ்ணா, இதற்கு முன்பு கமல், ஏ.எல். விஜய் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

கார்ட்டூனிஸ்ட் மதன், கமலின் நெருங்கிய நண்பர் என்பதாலும் கிருஷ்ணா விபத்தில் பலியானது கமலை மிகவும் பாதித்துள்ளது.

அதனால் தான் தன்னுடைய ட்வீட்டில், எத்தனையோ விபத்துகளைச் சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தும் அதற்கு 3 பேர் பலியானதும் பல்வேறு விழிப்புணர்வுகளைத் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் திரைப்படப் படப்பிடிப்புகள் கூடுதல் பாதுகாப்புடன் நடைபெறவேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே