ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால் பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும் : ஹெச்.ராஜா

பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தால், பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நாகரிகமானவர்கள் என்று கூறினார்.

திராவிடர் கழகத்தினருக்கு இந்து எழுச்சியைப் பார்த்து பயம் வந்துவிட்டதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

மேலும், இந்து கடவுளை இழிவுபடுத்தி எதிர்வினை பெற்ற வீரமணி மன்னிப்பு கேட்காதபோது நாகரிகம் பண்பாடு பற்றி வீரமணி ரஜினிக்கு பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

அவரவர் செய்த வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு என்றும் கூறினார்.

மேலும் திராவிடர் கழகத்துடனான தொடர்பை தி.மு.க. முறிக்கவில்லை என்றால் விரைவில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரும் என்றும் எச்சரித்தார்.

பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற அமைச்சர் பாஸ்கரனின் கருத்து குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.

மேலும் இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் ஏற்கெனவே முதலமைச்சரே கூட்டணி குறித்து பேசக்கூடாது என தெளிவாக கூறியிருக்கிறார் என்றும்; அவர்களின் கொள்கை வேறு எங்களின் கொள்கை வேறு என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே