உலக நாடுகளை மிரட்டும் கொரோனா வைரஸ்

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலகின் பிற நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரசின் தாக்கத்திற்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் கொடூரமான வைரஸின் தாக்கம் சீனாவில் ஊருடுவியுள்ளது. கொரோனா என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், வுஹான், பெய்ஜிங், ஷாங்காய், தெற்கு குன்டோங் உள்ளிட்ட மாகாணங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் ஏற்படும், பின்னர் மூச்சு விட சிரமப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இந்த வைரசால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர் சீன அதிகாரிகள்.

மேலும், 450 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக சீனா தெரிவித்தாலும் இந்த எண்ணிக்கை 2500-ஐ தாண்டும் என கூறப்படுகிறது.

முதலில் விலங்களிடம் இருந்து பரவிய இந்த வைரஸ் தற்போது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருவதை சீன மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜப்பான், தென் கொரியா, தைவான், தாய்லாந்து போன்ற சீனாவின் அண்டை நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் உள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.

இதனால், தங்களது நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.

சீனாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பும் இந்த இக்கட்டான சூழலை சுகாதார அவசரநிலையாக அறிவிக்கலாமா எனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ரஷ்யாவில் பரவினால் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என தெரிவித்துள்ளது அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்.

கடந்த கால சார்ஸ் வைரஸை போல் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை உருவாக்காமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்படுகின்றன.

இதுவரை 9 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே