விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ தவசலிங்க சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று மஹா கணபதி ஹோமம் பூஜையுடன் தொடங்கியது.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் மூளிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஸ்ரீ தவசிலிங்க சுவாமி கோயில் உள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் குலதெய்வ வழிபாட்டுக் கோயிலான இந்தக் கோயிலில் கடந்த ஒன்றறை ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.
சுற்றுப்பகுதி கிராம மக்களின் ஒத்துழைப்போடு கோயில் திருப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மேற்கொண்டு வருகின்றார்.
கோயிலில் புதிதாக மூலஸ்தான ராஜகோபுரம் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு, கன்னிவிநாயகர், வேட்டை கருப்பசாமி, சிவன், முருகன், வள்ளி, பார்வதி உட்பட பல்வேறு பரிகார தேவதைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானம், அர்த்த மண்டபம்(கல திருப்பணிகள்) மகாமண்டபம், திருமதில்சுவர், தளம் கல் பதிப்பு பணிகளும் நடைபெற்றன. கோயில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றார் இந்நிலையில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை மஹா கணபதி ஹோமம், பூஜையுடன் தொடங்கியது.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டனார்.
முன்னதாக கோயில் சாவிகளை கோயில் நிர்வாகிகள் பொதுமக்களிடம் அமைச்சர் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் கிராம மக்கள் பக்தர்கள் சிற்பி கருப்பசாமி, கோயில் தலைவர் செல்லசாமி, மூளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதிராஜா, விருதுநகர் ஒன்றிய அதிமுக செயலாளரும் கோயில் செயலாளருமான தர்மலிங்கம், கோயில் பொருளாளர் கணியப்பன், அறங்காவலர் குழு உறுப்பினர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரோனா வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.