வாராக்கடனால் தத்தளிக்கும் LIC நிறுவனம்

காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வாரா கடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

எல்ஐசி என்ற பெயரைக் கேட்ட அடுத்த நொடி நம்முடைய மனதில் உடனடியாகத் தோன்றும் உணர்வு நம்பிக்கை.

சிறுவயதில் இருந்தே எல்ஐசி நிறுவனமென்றால் அது மிகவும் நம்பகமான பொதுத்துறை நிறுவனமென்றே சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டுள்ளோம்.

அதற்கு வலுசேர்ப்பது போல நிறைய விளம்பரங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

இந்த நிலையில் தான் எல்ஐசி நிறுவனத்திற்கு 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வாராக்கடன் உள்ளதென்று வெளியாகியுள்ள தகவல் அதன் மீதான நம்பகத்தனையை கேள்வி குறியாக்கி உள்ளது.

எல்ஐசி நிறுவனம் காபீட்டுத் துறையில் மட்டுமில்லாமல் அரசாங்கப் பத்திரங்களை வாங்குதல் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் வங்கிகளுக்கு பிணை வழங்குதல் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்துவருகிறது.

நாட்டின் அத்தியாவசிய வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை எல்ஐசி நிறுவனத்திடமிருந்து தான் மத்திய அரசு பெற்றுக் கொள்கிறது.

ஆனால் மற்ற பொதுத்துறை வங்கிகளைப் போன்றே எல்ஐசி நிறுவனமும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் கவனமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் எல்ஐசி-ன் மொத்த வாராக்கடனின் அளவு 6.10% ஆக அதிகரித்துள்ளது. 36 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள எல்ஐசி நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரத்தின்படி தமக்கு 30,000 கோடி ரூபாய் வாராக்கடன் இருப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் எல்ஐசி-ன் வாராக்கடன் மதிப்பு இருமடங்காக உயர்ந்துள்ளது பாமர மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்ஐசியிடம் கடன் பெற்றுள்ள நிறுவனங்களில் டெக்கான் கிரானிக்கல், யூனிடெக், எஸ்ஸார் போர் போன்ற முன்னணி நிறுவனக்களும் அடக்கம்.

இந்நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் கூட அது எல் ஐ சிக்கு சாதகமாக அமைவது கடினம்தான் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே