கொரோனா வைரஸ் இந்தியாவில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க காரணம், பிரதமர் மோடி அறிவித்த லாக்டவுனை மக்கள் சரியாக கடைபிடிப்பது தான் என நடிகர் விவேக் பேசியுள்ளார்.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் முகக் கவசம் அணிந்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நகைச்சுவை நடிகர் விவேக், அடுத்த 20 நாட்கள் கொரோனாவில் இருந்து தப்பிப்பது ரொம்ப முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார்.
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 25 நாட்கள் வரை ஊரடங்கில் இருந்த நாம், அடுத்து வரும் 20 நாட்களில் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம் என பேசியுள்ள நடிகர் விவேக், உடலுக்கு மிளகு ரசம், உயிருக்கு முகக் கவசம், இந்த இரண்டும் இருந்தால் லைஃப் ஆசமாக இருக்கும் என தனது பாணியில் பஞ்ச் வைத்து பேசியுள்ளார்.
மேலும், கண்கள் வழியாக கொரோனா அதிகளவில் பரவாது என்றும், வாய் மற்றும் மூக்கு பகுதிகளை முழுமையாக மூடி இருக்கும் படி முகக் கவசங்களை அணிவது கட்டாயம் என்றும், வீட்டை விட்டு வெளியே வரும் பட்சத்தில் முகக் கவசம் தான் உங்களை காக்கும் கருவி என்றும் பேசியுள்ளார்.