தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நிறைவு – இயங்கத் தொடங்கிய பேருந்துகள்

தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. எனினும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கை, தமிழக மக்கள் முறையாகக் கடைபிடித்தனர்.

இதனால் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தன்னலமின்றி அயராது பாடுபடும் பணியாளர்களுக்கு நேற்று மாலை 5 மணி அளவில், கரவொலி எழுப்பியும், மணியடித்தும் மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிலையில், இரவு 9 மணிக்கு நிறைவடைய இருந்த சுய ஊரடங்கை, இன்று காலை 5 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

22 மணி நேரம் நீடித்த ஊரடங்கு, இன்று காலை 5 மணி அளவில் நிறைவடைந்தது.

இதையடுத்து, தேநீர் கடைகள், காய்கறி கடைகள் திறந்திருக்கின்றன.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் அரசுப் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

எல்லையோரங்களில் பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் அனுப்பப்பட்டாலும் அந்த மாநில எல்லைகள் வரைதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மத்திய அரசு சீல் வைக்க உத்தரவிட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

எனினும் பயணிகளின் தேவையை பொறுத்து, பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே