கதறி அழுத பா.ரஞ்சித்: அஞ்சலி செலுத்திய திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் – எஸ்.பி.ஜனநாதன் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடலுக்கு திரைப் பிரலங்களும் அரசியல் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நடிகர்கள் ஷ்யாம், அருண்விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். இதைத் தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அவர் ‘லாபம்’ என்ற படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் கடந்த 11-ம் தேதி மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றிருந்தார். மணி 3.30 ஆகியும் அவர் திரும்பாததால், அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு திறந்திருக்க சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிசிச்சை அளிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது இல்லத்தில் எஸ்.பி.ஜனநாதனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர்கள் நாசர், அருண் விஜய், இயக்குநர்கள் சேரன், பா.ரஞ்சித், அமீர், லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.ஜனநாதனுக்கு அஞ்சலி செலுத்தும்போது பா.ரஞ்சித் உடைந்து அழுதார்.

திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களும் ட்விட்டர் மூலம் ஜனநாதனின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நாளை காலை 10 மணி அளவில் மயிலாப்பூரில் ஜனநாதன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே