கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள கடற்கரைகள் அனைத்தும் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசின் அனைத்துத் துறைகளும் எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதைப் பெரிதும் தடுக்கும் முயற்சியில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. கோயில்கள், தர்காக்கள், சர்ச்சுகளில் மக்கள் கூடவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சமூக தனிமைப்படுத்துதல் அவசியம் என்று அரசு பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் அரசின் உத்தரவை அலட்சியம் செய்து ஆங்காங்கே கூடுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதன்படி, தமிழகத்திலும் நாளை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடற்கரையில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணி முதல் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடற்கரைகளும் மூடப்படுகின்றன.

பொதுமக்கள் அங்கு கூட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை இது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரைகளுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே