மணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை..! பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க பேரம் பேசியதோடு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் , உதவி ஆய்வாளர் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு படை காவலர்கள் இருவர் என மொத்தம் 4 பேரை பணி நீக்கம் செய்து டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக கேரள எல்லையில் 33 சோதனை சாவடிகள் அமைத்து மணல் தடுப்பு பறக்கும் படைகள் மூலம் மணல் கடத்தும் லாரிகள் பரிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையில் அமைக்கப்பட்ட மணல் தடுப்பு பறக்கும்படை , கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ந்தேதி புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு செல்ல இருந்த மணல் லாரி ஒன்றை மறித்து ஆய்வு செய்துள்ளார்.

அந்த லாரியில் ஆவணங்கள், அனுமதி ரசீதுகள் அனைத்தும் முறையாக இருந்த போதும், லாரியை ஆரால்வாய்மொழி காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். 3 நாட்களாகியும் அந்த லாரி உரிமையாளர் மீது மணல் கடத்தல் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் காவல் ஆய்வாளர் வனிதா ராணியுடன் சேர்ந்து லாரி உரிமையாளரிடம் , பெரும் தொகையை கேட்டு பேரம் பேசியதாகவும், லஞ்சம் கொடுக்க மறுத்ததால் லாரியை தாசில்தாரிடம் ஒப்படைத்து அபராதம் விதித்து அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகின்றது.

முறையான ஆவணங்கள் இருந்தும் காவல் அதிகாரிகள் 3 நாட்கள் லஞ்ச பேரம் நடத்தியது குறித்து மணல் லாரி உரிமையாளர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இந்த விசாரணையில் காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், தலைமை காவலர்கள் ரமேஷ், ஜோஷ் ஆகியோரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை, லாரி உரிமையாளரின் புகார் உண்மையானது என்றும், காவல் ஆய்வாளர் வனிதாராணி உள்ளிட்ட 4 பேரும் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததோடு, பேரம் பேசியதும் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக டிஜிபிக்கு அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் வனிதாராணி, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், தலைமை காவலர்கள் ரமேஷ், ஜோஸ் ஆகிய 4 பேரையும் காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்து டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டார். வனிதாராணி தற்போது விருதுநகர் காவல்துறையிலும், செந்தில்வேல் நாகர்கோவில் போக்குவரத்து காவல் பிரிவிலும், தலைமை காவலர்கள் ரமேஷ் , ஜோஸ் ஆகியோர் கோட்டாரிலும் காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

பணம் கேட்டு பேரம் பேசிய குற்றத்திற்காக ஒரே நேரத்தில் தமிழக காவல்துறையில் இருந்து இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை எனவும் லட்சங்களில் கமிஷன் பெற்றுக் கொண்டு மணல் கடத்தல், அரிசி கடத்தல் போன்ற குற்றங்களுக்கு துணை போகும் காவல்துறையினர் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழக காவல்துறையின் டிஜிபியாக திரிபாதி பொறுபேற்ற பின்னர் ரவுடிகளும், வழிப்பறி திருடர்களும் தங்களது கைவரிசையை நிறுத்திக் கொள்ளும் விதமாக அதி தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் குற்றவாளிகளை களையெடுக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் இந்த 4 பேர் மீது பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே