விஜய் பெயரில் கட்சி, செய்தியாளர்கள் சரமாரி கேள்வி..? நழுவிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில், கட்சி ஒன்றை, நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், பதிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. பின்னர் அதனை எஸ்.ஏ.சி-யும் உறுதிப்படுத்தினார்.

பின்னர் கொஞ்ச நேரத்தில் தனது தந்தை கட்சியைப் பதிவு செய்திருப்பது குறித்து, செய்திகள் மூலம் தெரிந்துக் கொண்டதாகவும், அந்தக் கட்சிக்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

இதனால் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் சரியான தகவல் பரிமாற்றம் இல்லையோ என ரசிகர்களும், நெட்டிசன்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்தார் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

ஆனால் செய்தியாளர்களின் பல கேள்விகளை அவர் தவிர்த்தார்.

‘ஊடகங்கள் வாயிலாகத் தான், எனது தந்தை புதிதாக கட்சி துவங்கியது தெரியவந்தது’ என்று விஜய் தெரிவித்துள்ளாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்ற நிருபர்கள் கேள்விக்கு, ‘1993-ஆம் ஆண்டு ரசிகர் மன்றமாக துவங்கிய ஒரு அமைப்பு, நற்பணி மன்றமாக மாறி, மக்கள் இயக்கமாக மாறியது.

அந்த மக்கள் இயக்கத்தின் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சியைப் பதிவு செய்துள்ளேன்.

இது அவரது பெயரில் புதிதாக துவங்கப்பட்டது கிடையாது.​

ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த கட்சியை பதிவு செய்துள்ளோம்.

விஜய்க்கும் எனக்குமான சுமுக உறவு பற்றி கற்பனையாக சிலர் கூறுவதற்கு நான் விளக்கம் தர முடியாது’ என்றார் எஸ்.ஏ.சி.

‘கட்சி துவங்க இப்போது என்ன அவசியம் வந்தது? யாருக்காக இந்த கட்சி என நிருபர்கள் கேட்டதற்கு, ‘நான் கட்சி துவங்குவதற்கான அவசியம் என்ன என்பது பற்றி இப்போது தெரிவிக்க முடியாது. ஒவ்வொருவராக தனியாக பேட்டி எடுக்க வாருங்கள் அப்போது சொல்கிறேன்.

உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இப்போது எனக்கு நேரமில்லை என்றார்.

இதனால் நேரமில்லையா, பதில் இல்லையா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். சில விநாடிகள் யோசித்தவர், ‘நேரமில்லை’ என்றார்.

இதனையடுத்து, ‘என்னுடைய ரசிகர்கள் யாரும் கட்சியில் சேர வேண்டாம்? என்று விஜய் கூறியுள்ளாரே, இதை எப்படி புரிந்து கொள்வது என்ற நிருபர்களின் கேள்விக்கு, ‘இதை எப்படி வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளலாம். நல்லதை நினைத்து ஆரம்பித்தேன்.

நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்’ என்றார் எஸ்.ஏ.சந்திர சேகர். இதனால் என்ன நல்லது? யாருக்கு நல்லது? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘இத்தனை மைக் முன்பாக பதில் கூறி எனக்கு பழக்கம் இல்லை. தனித்தனியாக வேண்டுமானால் வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கும்பிட்டு விட்டு கிளம்பினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே