நிர்மலாவின் சர்ச்சை பேச்சு குறித்து ப.சிதம்பரம் கேலி

வெங்காயத்திற்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பட்டர் ஃப்ரூட்டையா நிதியமைச்சர் சாப்பிடுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், வெங்காயம் மற்றும் பூண்டை தான் சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவது கிடையாது என்றும் வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தும் குடும்பத்தில் இருந்து தான் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

வெங்காய விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடாவிட்டால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் விலையுயர்ந்த பட்டர் ஃபரூட்டை சாப்பிடுகிறாரா என கேலி செய்தார்.

நெட்டிசன்களும் நிர்மலா சீதாராமனின் கருத்தை கேலி செய்து பதிவிட்டு வருகின்றனர்.

நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் புரிதல் இல்லாததால் பொறுப்பற்ற வகையில் பேசி வருவதாகவும், வீடு தீப்பற்றி எரிந்தால் கூட அவர் முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவார் என்பதை குறிப்பிடும் வகையில் மீம்ஸ்களுடன் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

வெங்காய விலை விண்ணை முட்டும் அளவுக்கு ஒருபக்கம் உயர்ந்து வரும் நிலையில், ஆட்சியாளர்களின் இதுபோன்ற பதிலால் நொந்துபோவதை தவிர வேறுவழியில்லை என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே