ELECTION UPDATE : மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான மனுக்களை பெற வேண்டாம் : மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறையை முழுமையாக முடிக்க உத்தரவிடக் கோரி திமுக மற்றும் செ.கு. தமிழரசன் உள்ளிட்ட 12 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

திமுக சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாமல், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய மாவட்டங்களுக்கான வார்டு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் நரசிம்மா, வார்டு மறுவரையறை பணி முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மறுவரையறை பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால், மறுவரையறை செய்ய வேண்டாமா?? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, அதற்கான அவசியமில்லை என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நரசிம்மா தெரிவித்தார்.

மக்கள் கோரிக்கை அடிப்படையிலேயே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசின் சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி 9 புதிய மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றார்.

புதிய மாவட்டங்களில் மறுவரையறை முடியாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் போது வார்டு மறுவரையறை அவசியம் என்றார்.

மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன்? சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ, அதன்படியே உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், குறுக்கு வழியில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தக்கூடாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபிறகு நீதிமன்றத்தினால் தேர்தலை ரத்து செய்ய முடியாது என்ற நீதிபதிகள், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் என்றனர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என நினைத்தால் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவையுங்கள் என்றார்.

இதையடுத்து 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.

இதற்கு திமுக தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும், கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

அந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மறு உத்தரவு வரும் வரை ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அதில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே