ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, 106 நாட்கள் சிறைவாசம் முடிவுக்கு வந்ததை அடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சிதம்பரம் இன்று பங்கேற்க உள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஏற்கெனவே ஜாமின் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் பானுமதி, போபன்னா, ரிஷிகேஷ் ராய் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
பொருளாதார குற்றங்கள் அனைத்துக்கும் ஜாமின் மறுக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், அந்தந்த வழக்குகளின் தகுதி அடிப்படையிலேயே ஜாமின் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கில் சிதம்பரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், சிதம்பரம் அதிகாரமிக்க பதவியில் இல்லாததால், அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினர்.
இதையடுத்து, சிதம்பரத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இரண்டு லட்சம் ரூபாய் ஜாமின் பத்திரத்துடன் இருவர் உத்தரவாதம் வழங்க வேண்டும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு பயணம் மேற்கொள்ளக் கூடாது, சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, வழக்கு தொடர்பாக பேட்டியளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முக்கிய பொருளாதார குற்றவாளியாக ப.சிதம்பரம் செயல்பட்டிருப்பதாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கெயிட் தெரிவித்த கருத்துக்களை நீக்கும்படியும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார குற்றம் இழைத்தவருக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதாகவும், அதேசமயம், முறையாக விசாரணை நிறைவடைந்துவிட்டால் ஜாமின் வழங்க வேண்டியது அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமின் கிடைத்ததை அடுத்து சிதம்பரத்தின் 106 நாட்கள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து அவர் மாலையில் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது மகிழ்ச்சியளிப்பதாக அவரது மகனும், எம்பியுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ப.சிதம்பரத்தை 106 நாட்கள் சிறைவைத்திருந்தது வஞ்சகமானது என்றும் இந்த வழக்கில் தான் நிரபராதி என்பதை சிதம்பரம் நிரூபிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப. சிதம்பரம் பங்கேற்க உள்ளார்.
பொருளாதார நிலையில் பெரும் சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் அனல்பறந்து கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.