தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா.
திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிரபலமான ஜெயலலிதா, மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். இதில் எம்.ஜி.ஆர்-வுடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் கோலோச்சிய ஜெயலலிதா 1982-ல் அரசியலில் தடம் பதித்தார்.
இதையடுத்து 1983-ல் அவரை அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்.
1984-ல் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.
பின்னர், 1989 சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ- ஆனார்.
அத்துடன் தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார்.
இதையடுத்து, 1991-ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதலமைச்சராக பதவியேற்றார்.
முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொந்து குவித்ததாக கூறி, 1996 ஜூன் 14-ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதுவே, அவரின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் சறுக்கலையும், சிக்கலையும் ஏற்படுத்தியது.
இருப்பினும் தொடர்ந்து தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்கினார்.
2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38-ல் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டது.
மேலும் 2016- சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தது.
அத்துடன் 6-வது முறை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா.
உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் 74 நாட்கள் தொடர்ந்து உயர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ம் தேதி தனது 68-வது வயதில் ஜெயலலிதா மரணமடைந்தார்.
இந்நிலையில், இவரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இணைந்தது முதல் மறைந்தது வரை அவர் சந்தித்த சவால்கள்தான் எத்தனை?? எத்தனை??
ஆனால் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.
அந்த வகையில் இரும்பு பெண்மணியாக தமிழக மக்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஜெயலலிதா.