4,000 தீவிரவாதிகள் பெயர் நீக்கம் – பாகிஸ்தான் அரசு ரகசிய நடவடிக்கை

மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 4000 பேரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து பாக். ரகசியமாக நீக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு பிரான்சை சேர்ந்த நிதி ஒழுங்கு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.

அதன்படி நடவடிக்கை எடுக்க தவறினால் பாக். தற்போது உள்ள பழுப்பு பட்டியலில் இருந்து கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.

கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகளுக்கு சர்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிதியுதவி கிடைக்காது.

இதனால் அந்நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரும். இந்த நடவடிக்கைக்கு அஞ்சி மசூத் அசார் உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் மீது பாக். வழக்கு தொடுத்துள்ளது.

அதேசமயம் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்திடம் உள்ள பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்து 2000 பேரை நீக்கியுள்ளது.

இதை அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப கண்காணிப்பு நிறுவனம் காஸ்டெலியம் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் ‘வால் ஸ்டிரீட்’ பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2018ல் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் பட்டியலில் 7600 பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

அது கடந்த 18 மாதங்களில் 3800 ஆக குறைந்துள்ளது.

கடந்த மார்ச் துவங்கி 1800 பயங்கரவாதிகளின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட பலரின் மாற்றுப் பெயர் அமெரிக்கா மற்றும் ஐ.நா.வால் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளன.

உதாரணமாக மும்பை தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக கூறப்படும் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வியின் பெயர் பாக்.கின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் பயங்கரவாதிகள் பட்டியலில் இல்லை.

மேலும் பிறந்த தேதி அல்லது தேசிய அடையாள எண் போன்றவை இல்லாததும் பெயர் குழப்பத்திற்கு வழி வகுப்பதாக உள்ளது.

பாக். இதுவரை 4000 பயங்கரவாதிகளின் பெயர்களை நீக்கியுள்ளது.

ஆனால் அது குறித்து வெளிப்படையாக எந்த விளக்கமும் அறிவிக்காமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயங்கரவாத அமைப்புகளின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுக்க பாக். எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நிதி ஒழுங்கு நடவடிக்கை குழு ஆராய உள்ளது.

அப்போது பாக். ரகசியமாக பயங்கரவாதிகளின் பெயர்களை நீக்கியது குறித்து விசாரிக்கப்படும் என தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே