தமிழகத்தில் பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் சிக்கல், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர், நாகூர் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனாலும் வேளாங்கண்ணியில் இருக்கும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெற்று வரும் ஆண்டுத் திருவிழா காரணமாக வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் 29-ம் தேதி வேளாங்கண்ணியில் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றைய தினம் பேராலய நிர்வாகத்தினர் 30 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
செப்டம்பர் 7-ம் தேதி திருத்தேர் பவனியும், 8-ம் தேதி கொடியிறக்கமும் நடைபெற உள்ள நிலையில், திருவிழா முடியும் வரை வேளாங்கண்ணியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணித் திருவிழாவின்போது தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் கூடுவார்கள்.
ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று அச்சம் காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
எனினும் தற்போது பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பக்தர்கள் வரக்கூடும் என்பதால் திருவிழா முடியும்வரை வேளாங்கண்ணி தேவாலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மற்ற நாட்களில் வேளாங்கண்ணி பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பேராலயத்தில் சென்று வழிபடலாம் என்றும், செப்டம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் பக்தர்கள் யாருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படாது என்றும் வேளாங்கண்ணி கடற்கரைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றும் வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகள் செப்டம்பர் 8-ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகையைத் தவிர்ப்பதற்காக நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாரால் கண்காணிக்கப்படுகிறது.
குறிப்பாக, வேளாங்கண்ணியைச் சுற்றிலும் உள்ள அனைத்துப் பாதைகளிலும் போலீஸாரால் கடுமையாகச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உள்ளூர் மக்கள் மட்டும் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளே சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.