நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட தளங்கள் தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இணைய செய்தி ஊடகங்களும் இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதய சூழலின்படி, இந்திய பிரெஸ் கவுன்சில் அச்சு ஊடகத்தைக் கண்காணிக்கிறது.

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம், செய்தி சேனல்களைக் கண்காணிக்கிறது.

மத்திய தணிக்கை வாரியம் மற்றும் விளம்பர தர கவுன்சிலும் முறையே திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களைக் கண்காணிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம், ஓடிடி தளங்களை வரமுறைப்படுத்த ஒரு தன்னாட்சி அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. 

ஓடிடி தளம் என்பது வெறும் செய்தித் தளங்களாக மட்டுமல்லாமல் நெட்ஃபிலிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட சேவைகளையும் உள்ளடக்கியதாகும்.

முன்னதாக, டிஜிட்டல் ஊடகங்களை கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதாக தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் கூறியிருந்தது.

அந்த ஊடகத்தில் நிலவும் வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை சுட்டிக் காட்டி, அதை வரைமுறைப்படுத்த ஒரு குழுவை நியமிக்க யோசித்து வருவதாகவும் கூறியிருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஊடகத்தின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துமாறு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது என்று கூறியிருந்தார்.

ஆனால் ஓடிடி தளங்களும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களைப் போலவே ஒரு ஊடகம் என்பதால், அதையும் ஒழுங்குமுறைப் படுத்த ஒரு வழி வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே