தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் நள்ளிரவில் பேச்சுவார்த்தை..!!

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் 3 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி பங்கீடு குறித்து அதிமுக உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த பேச்சுவார்த்தையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மாநிலத் தலைவர் எல்.முருகன், பாஜகவின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை, நள்ளிரவு 12.50 வரை நீடித்தது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக 33 இடங்கள் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் பாஜகவினரை நிற்க வைப்பது, இதர கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பேச்சுவார்த்தையின் போது சசிகலா குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தனி விமானம் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக உடனான 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்றோ அல்லது நாளையோ பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை? என்பது தெரியவரும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே