தஞ்சையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் காவி சால்வை போர்த்தி தலையில் குல்லா வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தை பெரியாருக்கு இது போன்ற அவமதிப்பை சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

காவி சாயம் பூசிவது, செருப்பு மாலை அணிவிப்பது என கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் இத்தகையா கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது பெரியார் ஆதரவாளர்களின் கருத்து.

இந்நிலையில் தஞ்சையில் பெரியார் மீண்டும் அவமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் உறுப்பு கல்லூரி எதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் முழு உருவ பெரியார் சிலை உள்ளது.

அந்த சிலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் காவி நிற சால்வை அணிவித்து தலையில் குல்லா வைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அப்பகுதி மக்களே சேர்ந்து காவி சால்யையும், குல்லாவையும் அகற்றினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அந்த பகுதியில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக திராவிடர் கழகத்தினர் புகார் எதுவும் கொடுக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே