பாஜக அரசுக்கு எதிராக ஓரணியில் திரளும் எதிர்கட்சிகள்

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் பலரும் வீதிகளில் இறங்கி நாடு முழுவதும் பல கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களிலும் இந்த போராட்டம் தீவிரம் பெற்றுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இந்த போராட்ட களத்தில் முன் வரிசையில் நின்று குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த சட்டம் இந்தியாவை பிரித்தாளும் நடவடிக்கை என மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் தாம் உயிருடன் இருக்கும் வரை மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டேன் என முழங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய மக்களுக்கு எதிரான இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திமுக உட்பட பல எதிர்க்கட்சிகளுக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.

இப்படி இந்தியா முழுவதும் பாஜகவிற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்ட விழா, அரசியல் களத்தில் கவனம் பெற்றது. பாஜகவிற்கு எதிராக தீவிரமாக களவாடி வரும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்று இருந்தனர்.

குறிப்பாக காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு க ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது, பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கேரள சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரள அரசு கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக சட்டமன்றத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பலம் பொருந்திய கட்சியாக உருவாகியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் மம்தாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

அதேபோன்று திமுக அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த போராட்டத்திற்காக காங் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அழைத்து வரவும் திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தபோது முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாஜக ஒன்றும் வெல்லமுடியாத கட்சி அல்ல என்று கூறியிருந்தார்.

அசுர பலம் கொண்ட பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரள தொடங்கியிருக்கின்றனவா எதிர்க்கட்சிகள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இதற்கான விடை வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே