சபரிமலை மண்டல பூஜைக்காக நடை திறப்பு

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு இருக்கிறது. ஐயப்பனை தரிசனம் செய்யச் சென்ற நடுத்தர வயதைச் சேர்ந்த 10 பெண்களை காவலர்கள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணி அளவில் தீப ஆராதனைகளுடன் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடை திறப்பை காண ஐயப்ப பக்தர்கள் காலை முதலே பம்பையில் குவிந்தனர்.

பலத்த பாதுகாப்புக்கிடையே பாம்பையில் இருந்து பிற்பகல் 2 மணியளவில் சபரிமலை நோக்கி செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பத்து வயதிற்குள் மற்றும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண் பக்தர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த 10 பெண்களின் வயது 50 வயதுக்கு கீழ் இருந்ததால் அவர்களிடம் சபரிமலையின் நம்பிக்கை குறித்து காவல்துறையினர் விளக்கி கூறியதாக தெரிகிறது.

அதனை ஏற்றுக்கொண்ட 10 பெண்களும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பதை கை விட்டு திரும்பிச் சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே