உழைப்பால் மட்டுமே ஆளுநர் போன்ற உயர் பதவிகளை அடைய முடியும் : தமிழிசை

உழைப்பால் மட்டுமே ஆளுநர் போன்ற உயர் பதவிகளை அடைய முடியும் என்று தெரிவித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்திற்கும் தெலங்கானாவிற்கும் எப்போதும் பாலமாகவும், பலமாகவும் இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

அயன்புரம் நாடார் உறவின்முறைச் சங்கத்தின் 70-வது ஆண்டு விழா சென்னை அயனாவரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டார்.

நாடார் மஹாஜன சங்கத்தின் பொது செயலாளர் கரிகோல் ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆளுநர் தமிழிசை, தெலங்கானாவில் இருந்தாலும், தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகத்தை தொலைக்காட்சியில் நேரலையாக கண்டு மகிழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஆளுநர் என்றாலே ஓய்வெடுக்க கூடிய பணியில் இருப்பவர் என்று பலரும் நினைப்பதாகவும், ஆனால், ஓய்வில்லாமல் மக்கள் பணியாற்றவே, ஆளுநர் பதவியை தாம் பயன்படுத்தி வருவதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே