அதிமுக தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து

அதிமுக-வின் தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று தருமபுரியில் நடந்தது. தருமபுரியில் தனியார் மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்று, தருமபுரி வேட்பாளர் வெங்கடேஷ்வரன்(பாமக), பென்னாகரம் வேட்பாளர் ஜி.கே.மணி(பாமக), பாப்பி ரெட்டிப் பட்டி வேட்பாளர் கோவிந்த சாமி (அதிமுக) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்த பின்னர் பேசியது:

ஆட்சியில் இருக்கும் கட்சி மீது, ஆட்சியின் நிறைவுக் காலத்தில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலை இருப்பது இயல்பு. ஆனால், தமிழ கத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக-வுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு தான் இருக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருப்பதே அதற்கு காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே.மணி பேசியது:

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தமிழக முதல்வர் பழனிசாமி செயல்படுத்தி உள்ளார். வன்னியர் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக நீண்ட காலமாக போராடி வந்தது. இந்நிலையில், தமிழக அரசு உள் ஒதுக்கீடு அளித்து சமூக நீதிக்கான விடியலை தந்துள்ளது. எனவே, அதிமுக-வுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக-வின் தேர்தல் அறிக்கையும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினர் செந்தில்(பாமக), முன்னாள் எம்எல்ஏ-க்கள் வேலுச்சாமி (பாமக), பாஸ்கர்(பாஜக), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே