காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு!

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக தனிச்சட்டம் இயற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 2016-17ம் ஆண்டில் 2 ஆயிரத்து 247 கோடி ரூபாயை தமிழக அரசு அளித்துள்ளது என்றும்; 2016ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 90 லட்சம் விவசாயிகளுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.

 தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 2011ம் ஆண்டில் அப்போதைய திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதாக முதலமைச்சர் கூறினார்.

அதேபோல் பல்வேறு இயற்கை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் தொடர்ந்து வேளாண் செய்து வருவதாகவும், ஆதலால் இப்பகுதியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்தார்.

அதற்காக சட்டவல்லுநர்களோடு ஆலோசித்து தனிச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே