10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்த முடிவு காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்தது. இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என, பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
கரோனா அச்சம் காரணமாக, மாணவர்களைத் தேர்வுகளுக்கு அனுப்ப பெற்றோர்களும் தயங்குவதாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பான வழக்கில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டது.
அப்போது, வரும் மாதங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தேர்வு நடத்த இதுவே உகந்த தருணம் என தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வையும், 12-ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளையும் ரத்து செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 9) அறிவித்தார்.
மேலும், மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் முதல்வர் அறிவித்தார்.
இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை:
“அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அண்டை மாநிலமான தெலங்கானா, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு, ஆசிரியர்கள் எதிர்ப்புக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருப்பதை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஹால் டிக்கெட், தேர்வு எழுதும் மையங்கள் என அனைத்தையும் ஏற்பாடு செய்த பிறகு, காலம் கடந்து எடுக்கப்பட்ட இந்த முடிவை முதலிலேயே எடுத்திருந்தால், தேமுதிக வரவேற்றிருக்கும்”.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.