இந்தியாவில் கொரானா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ள நிலையில், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத் ஆகிய 3 நகரங்களில் கொரானாவால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 6 பேருக்கு ஏற்கெனவே கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூரில் நேற்று மேலும் 23 பேருக்கு கொரானா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 16 பேர் இத்தாலி நாட்டு பயணிகள் ஆவர்.

மேலும் புதிதாக கொரானா பாதித்தோரில் ஒருவர், குர்கானிலுள்ள பேடிஎம் நிறுவன ஊழியர் ஆவார்.

டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் இத்தாலி சுற்றுலா பயணிகள் பயணித்தபோது அவர்களுடன் தொடர்பிலிருந்த சுமார் 100 பேரும், ராஜஸ்தானில் தொடர்பிலிருந்த 215 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் டெல்லியில் கொரானா பாதித்த நபருடன் தொடர்பிலிருந்த 60 பேரும் தனிமையில் கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் பல நகரங்களிலும் கொரானா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வரும் போதிலும், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

டெல்லியில் கொரானா உறுதி செய்யப்பட்ட இத்தாலி நாட்டினர் 14 பேர் உள்ளிட்ட 15 பேர் இருக்கும் இடத்தில்தான், உகானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் 112 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

உணவகம் உள்ளிட்டவை இருதரப்புக்கும் பொதுவாக இருப்பதால், அந்த 112 பேரும் பீதியில் உள்ளனர்.

சீனா, தென்கொரியா, சிங்கப்பூர் சென்று வந்த கப்பலில் இருந்த ஒடிசா மாலுமிக்கும், அவரது மனைவிக்கும் கொரானா அறிகுறி இருந்ததையடுத்து, இருவரும் கட்டாக்கிலுள்ள மருத்துவமனையில் தனிவார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் 45 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு கொரானா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் 3 பேருக்கான பரிசோதனை முடிவு வராததால், அவர்கள் மட்டும் தனிவார்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரிலுள்ள துசோம் பகுதியில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது.

கொரானா அச்சம் காரணமாக, அவ்வழியாக வெளிநாட்டினரை அனுமதிக்க கூடாதென வலியுறுத்தி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சர்வதேச பாப் நட்சத்திரமான காலித், இந்தியாவில் அடுத்த மாதம் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார்.

கொரானா வைரஸ் அச்சம் காரணமாக, தற்போது அவர் இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே