புதிய உச்சத்தில் வெங்காய விலை; வியாபாரிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!

வெங்காய விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதன் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் விற்பனையாளர்கள் இருப்பு வைப்பதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாட்டின் மொத்த வெங்காய விளைச்சலில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆகியவைதான் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

கடந்த ஜூலை, செப்டம்பர் மாதங்களில் இந்த மாநிலங்களில் பெய்த கனமழையால் வழக்கமான விளைச்சலில் 70 விழுக்காடு குறைந்துவிட்டது.

விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணத்தினால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்வு கண்ணில் ரத்தத்தை வரவழைக்கிறது.

வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை என்ற உச்சபட்ச ஆயுதத்தைப் பயன்படுத்தியும், விலை உயர்வுக்கு எதிரான போரில் தோல்வியடைந்துவிட்டது மத்திய அரசு.

இதன் அடுத்தக்கட்டமாக விற்பனையாளர்கள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ஒட்டுமொத்த விற்பனையாளர்கள் 50 டன்னும், சில்லரை விற்பனையாளர்கள் 10 டன்னும் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெங்காயத்தின் விலை குறையாததால், பதுக்கலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த விற்பனையாளர்கள் 25 டன்னும், சில்லரை விற்பனையாளர்கள் 5 டன் அளவுக்கு மட்டுமே வெங்காயத்தை இருப்புவைக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

  • சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காய விலை 140 ரூபாய் முதல் 180 வரை விற்பனையாகிறது.
  • சின்ன வெங்காய விலை 180 முதல் 220 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மதுரையில் மொத்தமாக விற்பனை செய்யும் வெங்காய மண்டிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 140 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதன் காரணமாகவே 10 கிலோ வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது 2 கிலோ மட்டுமே வாங்கி செல்வதாக கூறுகின்றனர்.

வெங்காய விலை எப்போது குறையும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து டிசம்பர் மூன்றாவது வாரம் முதல் புது வெங்காய வரத்து தொடங்கி அதன் பிறகு தான் பெரிய வெங்காய விலை படிப்படியாகக் குறையும் என்கின்றனர் வியாபாரிகள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே