சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் மீதான வழக்கின் பிரிவு மாற்றம்…!

கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான விவகாரத்தில், கைதான சிவசுப்பிரமணியன் மீதான வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில், கனமழை காரணமாக கடந்த 2-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஒரு வீட்டின் பிரமாண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

சத்தம் கேட்டு விழுந்தடித்து ஓடிவந்த மக்களுக்கு அங்கிருந்த நான்கு ஓட்டு வீடுகள் தரைமட்டமாகியிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கோர விபத்தில் அக்‌ஷயா, லோகுராம், மகாலட்சுமி, ஹரிசுதா ஆகிய சிறுவர், சிறுமியர், 10 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.

இதில் ஆனந்த்குமார், நதியா, அக்‌ஷயா, லோகுராம் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

விதிமுறைகளை மீறி சுற்றுச்சுவர் கட்டியுள்ளதாகவும், ஆபத்தாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சுவர் இடிந்து விழலாம் என்றும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பட்டியலின மக்களின் வீடுகள் இருப்பதால், தீண்டாமை நோக்கத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் 17 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த சுற்றுச்சுவர் உரிமையாளர் சிவசுப்ரமணியம் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதனிடையே சுற்றுச்சுவர் கட்டிய தொழிலதிபர் சிவசுப்பிரமணியம் மீது போடப்பட்ட வழக்கு பிரிவில் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தார் மாற்றம் செய்துள்ளனர்.

ஏற்கெனவே அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதனை மாற்றி தெரிந்தே மரணத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவு போடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே