தமிழகத்தின் 37-வது மாவட்டமாக இன்று உதயமானது செங்கல்பட்டு…!

தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் தமிழகத்தின் 37-வது மாவட்டமாக உருவாகியுள்ளது.

2 ஆயிரத்து 944 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 லட்சத்து 41 ஆயிரத்து 572 பேர் வசிக்கின்றனர்.

செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் என மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. பல்லாவரம், ஆலந்தூர், வண்டலூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 8 தாலுகாக்களை கொண்டுள்ளது செங்கல்பட்டு.

புனித தோமையார் மலை, காட்டாங்குளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்ளும் உண்டு.

செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் என 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தாலும் இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி இல்லை.

தொழில்வளங்கள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், மகேந்திரா சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலம் இருக்கிறது.

மறைமலைநகரில் ஃபோர்டு கார் தொழிற்சாலையும், அங்குள்ள தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.

அதேபோல், நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கிய சிறுசேரி சிப்காட் தொழிற்சாலை, OMR சாலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்தான் வருகின்றன.

உலக பிரசித்தி பெற்ற மாமல்லபுரம், முட்டுக்காடு படகு குழாம், கடப்பாக்கம் கலங்கரை விளக்கம், முதலியார் குப்பம் படகு குழாம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என சுற்றுலாத் தலங்களுக்கும் பஞ்சமில்லை.

திருப்போரூர் முருகன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம், கோவளம் தர்கா, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம் என பல்வேறு வழிப்பாட்டு தலங்களும் செங்கல்பட்டிற்கு சிறப்பு சேர்க்கின்றன.

மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி, பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே