கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள வெங்காய விற்பனை கடை ஒன்றில் கிலோ 10 ரூபாய்க்கு வெங்காயம் விற்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள் அதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் இந்தியா முழுவதுமே வெங்காயத்தின் விற்பனை உச்சத்தை எட்டிக் 200 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், சாதாரண சாமான்ய மனிதர்கள் வெங்காயம் வாங்குவதற்கே அச்சப்படும் சூழ்நிலை உருவாகி வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தற்போது சந்தைக்கு வரத் துவங்கி உள்ளதால் மேலும் பெங்களூர் பகுதியில், கர்நாடக பகுதிகளில் அதிக அளவில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் உள்ள வெங்காயம் தற்போது வெளி சந்தைகளுக்கு வர துவங்கியுள்ளது.
நேற்றைய தினம் கடலூர் திருப்பாப்புலியூர் பாம்பரி மார்க்கெட்டில் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு வெங்காயம் விற்ற போதே மக்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் அலைமோதியது.
தற்போது கடலூர் முதுநகர் பகுதியில் AVR காய்கறி மொத்த வியாபாரி கடையில் சாலையோரம் வெங்காய மூட்டைகளை அடுக்கி, கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் என்றும்; ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படும் என்று வெங்காயம் விற்பனை செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் அதனுடன் சேர்த்து ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் என்று விற்று வருகின்றனர்; அதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெங்காயம் வாங்க முற்படுவதால் அந்த கடையில் கூட்டம் அலை மோதுகிறது.
மேலும் சாலையோரம் கடை என்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது