கொரோனா : சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு – ஸ்டிக்கர் ஒட்டும் மாநகராட்சி

இந்தச் சூழலில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறையினர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசித்து சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுகாதாரத்துறையினர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்ற வீடியோ கான்ஃபரன்ஸ் இன்று நடத்தப்பட்டது.

இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்காக வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களின் பட்டியல் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளது.

அதையும் மீறி சகஜமாக வெளியில் நடந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்.

மேலும், இவர்களைக் கண்காணிப்பதற்காக ஸ்டிக்கர் ஒன்று அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கரில்

பெருநகர சென்னை மாநகராட்சி, கோவிட் 19. கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு, எங்கிருந்து எங்கு வந்த விவரம், பெயர், முகவரி, எத்தனை நபர்கள் போன்ற தகவல்கள் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.

சென்னையில் மட்டும் 3,000 வீடுகளில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இந்த ஸ்டிக்கர்களை மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையினரும் ஒட்டிவருகின்றனர்.

இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி, சென்னை நகர் முழுவதும் கிருமி நாசினி மருந்தை ஜெட் இயந்திரம் மூலம் தெளித்துவருகிறது.

இதனால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும் என்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே