கோவை ஓடந்துறை கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய திரு.சண்முகம் 2019 உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1996-ம் ஆண்டில் தொடங்கி 2006 வரைக்கும் ஓடத்துறையின் பஞ்சாயத்துத் தலைவரான திரு.சண்முகம் இருந்துள்ளார்.
அதன்பின், ஓடந்துறை பஞ்சாயத்து பெண்களுக்காக ஒதுக்கியதால் 2006-ல் இருந்து அவரின் மனைவி லிங்கம்மாள் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்துள்ளார்.
அவர்களது பதவிக் காலத்தில், காற்றாலை அமைத்து, அதன் மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஊர் மக்களின் தேவைக்குப் போக மீதம் உள்ள மின்சாரத்தை, தமிழக அரசின் மின் வாரியத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
850 பசுமை வீடுகளைக் கட்டித்தந்து ஓடந்துறையை குடிசைகள் இல்லாத கிராமமாக மாற்றினார், சண்முகம்.
நாட்டிலேயே முதன்முறையாக, ராஜீவ் தேசிய குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த ஊராட்சியில்தான்.
இப்படி ஓடந்துறையை, மோஸ்ட் வான்டட் கிராமமாகத் திரும்பிப் பார்க்க வைத்த சண்முகத்துக்குப் பல்வேறு விருதுகள் கிடைத்தன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கட்சியைச் சேர்ந்தவரான சண்முகம் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு உள்ளார்.
அவரை எதிர்த்து தங்கவேல், சிரிஸ் கந்தராஜா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் சண்முகம் முன்னிலையில் இருந்தார்.
ஆனால், இறுதியில் 57 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேல் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.
ஓடந்துறையை நாட்டின் முன்மாதிரி கிராமமாக மாற்றிய சண்முகம் தோல்வியடைந்திருப்பது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த ஊராட்சி பகுதியாக விளங்கிய ஓடந்துறை கிராமம் மத்திய, மாநில விருதுகள் பலவற்றை பெற்றுள்ளது. உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றது.
ஓடந்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து திரு.சண்முகம் நிகழ்த்தி காட்டிய மாற்றங்கள் பல செய்திகளில், மேடைகளில் பெரிதாய் பேசப்பட்டது.
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “மக்கள்கிட்ட விசுவாசம் இல்லன்னுதான் சொல்லணும். எங்க அப்பா காலத்துல இருந்து ஓடந்துறை பஞ்சாயத்துக்காக நாங்க உழைச்சுகிட்டு இருக்கோம். அரசுகிட்ட இருந்து கிடைக்கிற நிதிகள 100 சதவிகிதம் முழுமையா பயன்படுத்தியிருக்கோம். அதனாலதான் ஓடந்துறை இன்னிக்கு இப்படி வளர்ந்துருக்கு.
தேர்தல் பிரசாரத்துல எனக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. போன இடத்துல எல்லாம் நல்ல கூட்டம். நேருக்கு நேர் என்ன எதிர்த்து ஜெயிக்க முடியாதுனு நினைச்சவங்க, மக்களுக்கு காசு கொடுத்து திசை திருப்பிட்டாங்க.
மக்களும் கடந்த காலத்த பத்தியெல்லாம் நினைச்சுப் பார்க்காம, அவங்க கொடுத்த 1,000 ரூபா தான் பெருசுனு அவங்களுக்கு ஓட்டு போட்டுட்டாங்க.
மக்களுக்கு இவ்வளவு பண்ணியும் 1,000 ரூபாதான் வெற்றிய தீர்மானிக்குதுன்னு நினைக்கிறப்ப கஷ்டமா இருக்கு.
ஓடந்துறைல பட்டியலின மக்கள் சிலருக்கு வீடு இல்லாம இருக்கு. இந்த முறை ஜெயிச்சிருந்தா அந்த மக்களுக்கு வீடு கட்டித் தரலாம்னு நினைச்சிருந்தேன்.
முக்கியமா சொல்லணும்னா, ஒவ்வொரு வீட்லயுமே சொந்தமா மின்சாரம் தயாரிக்கிற மாதிரி ஒரு திட்டம் கொண்டு வரலாம்னு முடிவு பண்ணியிருந்தேன்.
அதாவது, மின்வாரியத்துக்கிட்ட போகாம, அந்தந்த வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அவங்களே தயாரிச்சுக்கிறதுதான் அந்தத் திட்டம். என்ன பண்றது மக்களுக்கு வெயில்ல நிக்கிறப்பத்தான் நிழலோட அருமை தெரியும்” என்று மிகவும் வேதனையுடன் பகிர்ந்தார்.
ஓர் பஞ்சாயத்து தலைவர் நினைத்தால், உலக நாடுகளையும் தங்களது கிராமத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பதற்கு ஓடந்துறை சண்முகம் சிறந்த உதாரணம்.
ஆனால் மக்கள் அதனை நினைவு கூறாமல் இருந்துவிட்டார்கள் என்று நினைக்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது….