#NZvsIND : 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி..!!

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி பிரமாதப்படுத்தியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியை தழுவிய நிலையில் 2ஆம் ஒருநாள் போட்டி இன்று Eden Park-ல் நடைப்பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் யுவேந்திர சாஹல் ஆகியோருக்கு இந்திய ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.

நியூசிலாந்து அணியில் சாண்ட்னெர், சோதிக்கு பதிலாக மார்க் சேப்மென், கைல் ஜேமிசன் அகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கைல் ஜேமிசனுக்கு இது அறிமுக போட்டியாகும்.

இதனையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் மற்றும் ஹென்ரி நிகோலஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஹென்ரி நிக்கோலஸ் 41 ரன்களை எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். டாம் ப்லண்டெல் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மார்ட்டின் கப்தில் தனது 36வது அரை சதத்தை கடந்தார்.

இதன்பின் களம் இறங்கிய ராஸ் டெய்லர் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்தார்.

நியூசிலாந்து அணி 171 ரன்கள் எடுத்த நிலையில் மார்ட்டின் கப்தில் ரன் அவுட் ஆனார்.

இறுதிவரை ராஸ் டெய்லர் களத்தில் நின்று 74 பந்துகளில் 73 ரன்களை அடித்து அசத்தினார்.

50 ஒவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்தது.

274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களம் இறங்கினர்.

மயங்க் அகர்வால் 3 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

அறிமுக வீரரான கைல் ஜேமிசன், பிரித்வி ஷாவை 24 ரன்களுக்கு போல்டாக்கி வெளியேற்றினார். இது அவரது முதல் ஒரு நாள் போட்டி விக்கெட்டாகும்.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 15 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுத்தியின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

தொடர்ந்து கே.எல்.ராகுலும் வந்த வேகத்தில் 4 ரன்களுக்கு நடையைக்கட்டினார். ஜாதவ் 9 ரன்களுக்கு வெளியேறினார்.

21 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 96 ரன்கள் என்ற மோசமான நிலையில் இருந்த இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே நம்பிக்கையளித்தார்.

நியூசிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், இன்றைய போட்டியில் தனது 7வது அரைசதத்தை கடந்தார்.

57 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாம் லாதமின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயர் கேட்சாகி வெளியேறினார்.

அப்போது 27.3 ஓவர்களில் 129 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது இந்திய அணி இந்நிலையில் ஷர்துல் தாக்கூரும் தனது பங்குக்கு 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

102 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான தருணத்தில் ஜோடி சேர்ந்த நவ்தீப் சைனி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தின் போக்கை மாற்றும்விதமாக ஆடத்தொடங்கினர்.

களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்ட நவ்தீப் சைனி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி இந்திய ரசிகர்களுக்கு தெம்பு கொடுத்தார்.

நியூசிலாந்து வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில் ஆட்டத்தின் போக்கு இந்தியா பக்கமாக திரும்பியது,

இருவரும் அரை சதத்தை நெருங்கிய சூழலில் ஜேமிசன் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார் நவ்தீப் சைனி. 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 49 பந்துகளில் 45 ரன்களை அவர் திரட்டியிருந்தார்.

இதன் பிறகு அனைவரின் கவனமும் ஜடேஜா பக்கம் திரும்பியது.

அரை சதத்தை கடந்த ஜடேஜாவிற்கு, யுவேந்திர சாஹல் ஒத்துழைப்பு வழங்கினார்.

18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான கட்டத்திற்கு மத்தியில் வீசப்பட்ட 18வது ஓவரில் தேவையில்லாத ரன் அவுட்டில் சாஹல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது.

கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்ததால் வாழ்வா? சாவா என்ற சூழலில் ஜடேஜா பக்கம் கவனம் திரும்பியது.

48வது ஓவரின் இரண்டாவது பந்தில் பந்தை சிக்ஸருக்கு விரட்ட முயற்சித்த ஜடேஜா எல்லைக்கோடு அருகே கேட்சானார்.

48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்கள் எடுத்தது இந்திய அணி.

இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதுடன் 0-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது.

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு நியூசிலாந்து அணி பழிதீர்த்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே