இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்..!

இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமையும், நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு, ராஜபக்சே தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பின்னர் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை, ராஜபக்சே சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

கூட்டாக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது, தொழில்-முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, நெருங்கிய நண்பர்கள் என்று மோடி குறிப்பிட்டார்.

நமது மண்டலத்தில் பெரிய பிரச்சனையாக உள்ள தீவிரவாதத்திற்கு இரு நாடுகளுமே உரிய பதிலடி கொடுத்தவை என்றும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் சண்டே தீவிரவாத தாக்குதல், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் கூறினார்.

இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு, செழிப்பு ஆகியவை இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்திய பெருங்கடல் மண்டலத்திற்கே நன்மை பயக்கும் என குறிப்பிட்ட மோடி, ஒருங்கிணைந்த இலங்கையில் நீதி, சம உரிமை, மரியாதை, அமைதி ஆகியவற்றிற்கான தமிழ் மக்களின் விருப்பத்தை இலங்கை அரசு உணர்ந்து கொள்ளும் என தாம் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் தேவைகளை அந்நாட்டு அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்திக் கூறியுள்ளார். 

இலங்கை பிரதமராக இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ராஜபக்சே கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே