வயது முதிர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் உள்நோக்கத்தோடு எதையும் செய்யவில்லை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா, கால்நடை மருத்துவகல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டும் விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.  

அப்போது டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

டிஎன்பிஎஸ்சி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு என சுட்டிக்காட்டிய முதல்வர், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

பின்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவனை அழைத்து காலணியை கழட்டுமாறு கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர், திண்டுக்கல் சீனிவாசன் வயது முதுமையால் செய்த செயலை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது வேதனை அளிப்பதாகக் கூறினார்.

இதேபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது சொந்த கருத்துகள் என்றும்; கட்சியின் கருத்து அல்ல என்றும் பதிலளித்த முதலமைச்சர், அவர் பக்திமான் என்று குறிப்பிட்டார்.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்த முதலமைச்சரிடம், 9 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என கேட்கப்பட்டது.

எல்லா தேர்வுகளையும் ரத்து செய்து விட்டால் மாணவர்களின் திறனை மதிப்பிடுவது எப்படி என எடப்பாடி பழனிசாமி வினவினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே