புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை தொடர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய வரைவு கல்விக் கொள்கையில் இந்த அம்சம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மூன்றாம் மொழியாகச் இந்திக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளில் ஒன்றை படிக்க வேண்டும்.
தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளில் இதுவரை செம்மொழிகளாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் தவிர்த்து ஐந்து செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றை மூன்றாம் மொழியாக கற்க வேண்டிய சூழல் ஏற்படும்.
6 முதல் 12 வகுப்பு வரை படிப்பவர்கள் இரு வருடங்களுக்கு மூன்றாம் மொழியாக ஒன்றை படிக்க வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்கள் மூன்றாம் மொழியாக ஹிந்தி கற்பிக்க வேண்டும் என ஏற்கனவே கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பை அடுத்து அந்த பரிந்துரை திரும்பப் பெறப்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்கப்பட்ட நிலையில், இரண்டு லட்சம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் தற்போது திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதில் எந்த மொழியையும் திணிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருத்தப்பட்ட வரைவு புதிய கல்விக் கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.