உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பை மீறும் செயல் என்றும், இது நியாயமற்றது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு முறை இந்தியாவில் தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த இழிவை அடியோடு ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று வகைப்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய மாநில அரசுகள் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன.

இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக முற்பட்ட பிரிவினர் என்று அழைக்கப்பட்ட உயர்சாதியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இந்த இடஒதுக்கீட்டு முறையின் காரணமாகவே சாதியால் கல்வியே கற்காமல் இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் படித்து பட்டம் பெற்றனர்.

உயர்சாதி இடஒதுக்கீடு

இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வந்த உயர்சாதியினர், தற்போது தங்கள் சமுதாயத்திலும் ஏழைகள் இருப்பதால் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர். ஆனால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகள் முன்பாக உயர்சாதி ஏழைகளுக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது.

வழக்குகள்

இதற்காக அரசியலமைப்பின் 103 வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இடஒதுக்கீடு வரம்பு 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாக கூறி வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றம் விசாரணை

இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் பொருளாதார அடிப்படையில் உயிர் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாகவுய்ம் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு வாதம்

இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது நியாயமற்றது. சமத்துவ கொள்கைக்குள் இதை வகைப்படுத்த முடியாது. பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு பிரிவு 14 ஐ மீறும் செயல். இந்திரா சாவ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் இது எதிரானது.” என வாதிடப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே