இப்போது தேவை சொல் அல்ல; செயல் – மு.க.ஸ்டாலின் ட்வீட்

தமிழகத்துக்கு இப்போது தேவை சொல் அல்ல; செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;

இயற்கையை வென்றோம்; சவால்களைச் சந்தித்தோம்; இறப்பு விகிதம் உலகத்திலேயே குறைவு’ என்று வாய்ச்சவடால் செய்வதை விடுத்துச் செயல்பாட்டில் அக்கறை செலுத்துங்கள் என்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

நோய்த் தொற்றின் தலைநகராகச் சென்னை மாறிக்கொண்டிருப்பதைக் கட்டுப்படுத்த இனியாவது செயல்படுங்கள்.

சென்னையில் அரசு மருத்துவமனைகள் படுக்கைகள் போதாமல் திணறுகின்றன.

திருமண மண்டபங்களை, கல்விக் கூடங்களை மருத்துவமனைகளாக மாற்றுவோம் என அரசு அறிவித்தது என்ன ஆயிற்று?.

நாட்டிலேயே கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி வரும் நிலையில், முதலமைச்சர் ஆற்றிய உரையில் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கோ, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதற்கோ உரிய உறுதியான திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறாதது வேதனைக்குரியது.

வெறுமனே, ஏதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களைக் காக்க முதலமைச்சர் முன்வர வேண்டும்.

சென்னையின் ஐந்து மண்டலத்தை மிகுந்த கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி – அப்பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்கி – ஓர் அரண் போல் தடுப்பு நடவடிக்கை எடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும்.

இனியேனும் தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக மாதம் ரூ.5000 வழங்க வேண்டும்.

இப்போது தேவை சொல் அல்ல; செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே