தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்தா?

மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8ம் வகுப்பு வரை எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில் ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவர்களின் மதிப்பீட்டை பொறுத்தவரை வகுப்புக்கு வருகை மற்றும் செயல்திறன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் தற்போது, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் 27-ம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தை போல் தமிழகத்திலும் 8ஆம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்வுத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி தேர்வு ஒத்திவைப்பு, தேர்வு ரத்து குறித்து விரைவில் தேர்வுத்துறை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே