கொரோனா காரணமாக ஜூன் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள 5ஆம் கட்ட பொதுமுடக்கத்தில் 3 பிரிவுகளாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என்றும், அதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே வழங்குவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் 75 நாட்களுக்குப் பின்னர் இன்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.
உலக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், மணக்குள விநாயகர் ஆலயம் மற்றும் காரைக்கால் பள்ளி வாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபட்டனர்.
காலை 6 மணிக்கு கோயில்கள் திறக்கப்பட்டன.
கோயில் வாசலில் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் கைகளை கழுவியப் பின்பு, அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.
அத்துடன் பக்தர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்த பின்னர், தனிமனித இடைவெளியுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதே போன்று காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உட்பட அனைத்து மசூதிகளிலும் இன்று அதிகாலை 5 மணிக்கு தொழுகை நடைபெற்றது.
இதற்கிடையே அனைத்து வழிபாட்டு தலங்களிலும் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்காணித்தனர்.