தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த இரு நாட்களில் முற்றிலும் விலகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேநேரம் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் முதல் தமிழகம் தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டம், வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொருத்தவரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மன்னார்வளைகுடா குமரிக்கடல் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் சூறை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.