வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடல்நிலை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜாங் அன், உலக அளவில் மிக முக்கியமானவராக அறியப்படுகிறார்.
அணு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது நடத்தி அமெரிக்காவுக்கு தலைவலியைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.
எனினும், டிரம்ப் – கிம் இரண்டு முறை சந்தித்துப் பேசியும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லை.
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் பெருமளவில் இருந்த நிலையில், சீனாவுக்கு மிக அண்டை நாடாக இருக்கும் வடகொரியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டது.
பொதுவாகவே, வட கொரியாவில் ஊடகங்கள் அரசின் வசம் உள்ளன.
வெளி உலகத்துடன் வட கொரியர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாததால் அங்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளும் அரசின் பார்வைக்கு தப்பாமல் வெளியே வராது.
கொரோனா பாதித்தவர்களை வட கொரியா சுட்டுக்கொன்றிருக்கலாம் என்றும் பேச்சு அடிபட்டன.
சீனாவுக்கு மிக நெருக்கமாக உள்ள வட கொரியாவில் எந்த கொரோனா பாதிப்பும் இல்லை என்றால், நம்ப முடியவில்லை என்று அந்நாட்டு விவகாரங்களை கையாண்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஆனால், இது போன்ற சந்தேகங்களுக்கு வட கொரிய ஆளும் கட்சியின் பத்திரிகையில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
அதாவது, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியபோதே, வடகொரியா தனது எல்லைகளை மூடியது. சீனா உடனான வணிக போக்குவரத்தையும் நிறுத்தியது.
நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு தூதர்கள், அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். 30 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உலகத்தில் இருந்தே வடகொரியா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டது.
இதனாலே, வட கொரியாவில் ஒரு கொரோனா பாதிப்பு கூட கண்டறியப்படவில்லை என்று அந்த பத்திரிகையில் கூறப்பட்டது.
இந்த நிலையில், வட கொரியாவின் மிக முக்கியமான நாளான அந்நாட்டின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தை கிம் ஜாங் அன் புறக்கணித்தார்.
சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம்.
ஆனால் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளவில்லை.
2011ம் ஆண்டில் அவர் பதவிக்கு வந்ததில் இருந்து முதல் முறையாக இந்த விழாவில் கலந்து கொள்வதை தவிர்த்திருக்கிறார்.
கொரோனா அச்சத்தால் அவர் பங்கேற்கவில்லை என்றும் தகவல் பரவியது. ஆனால், அந்நாட்டின் அரசு ஊடகம் இதுதொடர்பாக எந்த செய்தியும் வெளியிடவில்லை.
கிம் கடைசியாக வெளியே தோன்றியது ஏப்ரல் 11-ம் தேதி ஆகும்.
கடந்த சில ஆண்டுகளாக கிம்-மின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவிக்கொண்டே இருந்தன.
இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரிய விவகாரத்தை கவனிக்கும் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவுத்துறையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது.