அரியர் விவகாரத்தில் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை – அமைச்சர் அன்பழகன்

அரியர் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பல மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வுகள் நடத்தமுடியாத சூழல் இருந்ததால் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர்த்து பிற மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் அரியர் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு முதல்வர் பழனிசாமிக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துவந்தனர்.

இந்த நிலையில், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெற வைக்கச்செய்ய முடியாது என இந்திய தொழில்நுட்பக் கழகம் தெரிவித்ததாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்து மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனரா இல்லையா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடித்துவந்தது.

இந்த நிலையில், இன்று பேசிய தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு தவிர பிற தேர்வுக்கு, பணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சியடைந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

அதேபோல, அரியர் கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுகின்றனர்.

யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின் படியே தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே