நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மேலும் சில மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி அளித்த தீர்ப்பினை மறுஆய்வு செய்யக்கோரியும்; நீட் தேர்வினை ஒத்திவைக்கக் கோரியும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. 

இந்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நடந்து முடிந்த ஜேஇஇ தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் கரோனா பரவல் காரணமாக பங்கேற்கவில்லை.

எனவே நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள்கூட தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

நீட் தேர்வை ஒத்திவைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறி இந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே