தி.மு.க., காங்கிரஸ் இரு கட்சியினரும் கூட்டணி குறித்த கருத்துக்களை பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்துப் பேசினார்.
தமிழகம், புதுவையில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் நாராயணசாமி கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளும் பின்னர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, கூட்டணியில் பிளவோ, பிரச்சினையோ கருத்து வேறுபாடோ இல்லை என்றார். சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் கூட்டணி தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு கட்சியினரும் கூட்டணி குறித்த கருத்துக்களை பொது வெளியில் தெரிவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, கே.எஸ்.அழகிரி அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
கூட்டணியில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் தி.மு.க நிலைப்பாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றும் கே.எஸ்.அழகிரி ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.