சொந்தமாக பேசியதால் சற்று குழம்பிவிட்டார் ரஜினி..! – கே.எஸ் அழகிரி

முரசொலி மற்றும் துக்ளக் பத்திரிகைகள் குறித்து, எவரும் எழுதிக் கொடுக்காமல் சொந்தமாக பேசியதால் ரஜினி தவறுதலாக பேசியிருக்கக் கூடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் இடையிலான பிரச்சனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும், கருத்துவேறுபாடும் கிடையாது.

எங்களுக்கு தோன்றிய கருத்தை கூறினோம். ஒவ்வொரு கட்சிக்கென்றும் ஒரு நிலை உள்ளது. எங்கள் நிலையை நாங்கள் கூறினோம்.

இது கூட்டணியை பாதிக்கும் விஷயம் இல்லை. ஒரு குடும்பம் என்று இருந்தால் ஊடலும் கூடலும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அதில் கோபமும் தாபமும் கிடையாது.

ஊடல் வந்த பின்னர் கூடல் வரும். கூடல் வந்த பின்னர் ஊடல் வரும். வாக்கு வாங்கியே இல்லாத கட்சி காங்கிரஸ் என துரைமுருகன் கூறியது அவர் கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.

விவாதம் செய்யாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டுபவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது.

சிறந்த நட்பு என்பது விவாதம் செய்ய வேண்டும். நாங்கள் சிறந்த நட்புடைய கட்சி. விவாதம் என்பது கருத்து வேறுபாடு அல்ல. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் எங்கள் கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.

முரசொலி, துக்ளக் குறித்து ரஜினி பேசிய கருத்திற்கு பதில் அளித்த அவர் , ரஜினி நல்லவர். ஏதாவது ஒன்று சொல்லிருக்கலாம்.

இரண்டையும் தொடர்பு படுத்தியது தவறு. சினிமா என்றால் கதை எழுதி கொடுத்திருப்பர். சொந்தமாக பேசியதால் சற்று குழம்பிவிட்டார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி புகைந்து கொண்டு இருக்கிறது என ஜெயக்குமார் கூறியது பற்றிய கேள்விக்கு, அவர் எதிர்க்கட்சி அவ்விதம் தான் கூறுவார்.

நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவிப்பது தான் அதிமுக. குடியுரிமை திருத்த மசோதாவில் மாற்று கருத்து கூட கூற முடியாதவர்கள் தான் அதிமுக என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே