எத்தனை முறை நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழ்தான் வாக்கு – சீமான் பேச்சு..!!

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது.

திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனிதா பர்வீனை ஆதரித்து பள்ளபட்டி பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ”காங்கிரஸ் எங்கள் இனத்தை அழித்தது.

பாஜக மனிதகுல எதிரி. இந்த இரண்டு கட்சிகளையும் ஏற்கமாட்டேன். ஒரு காலத்திலும் இரண்டையும் என் இனத்துக்குள் உள்ளே விடமாட்டேன்.

அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஒரு தடவையாவது ஸ்டாலின் சொல்வாரா?

பாஜகவுக்குக் கதவு திறந்துவிட்டவர்கள் அதிமுகவும், திமுகவும்தான்.

எத்தனை முறை இங்கு நட்டா வந்தாலும், நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜகவுக்கு வாக்குகள் விழும். தமிழ் மண்ணில் தாமரை மலராது” என்று சீமான் தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக தமிழகம் வந்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக நட்டா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே