வீடு, நிலம், தங்கம் எதுவுமில்லை; மக்கள் பணத்தில் தேர்தல் செலவு- மார்க்சிஸ்ட் வேட்பாளர் சின்னத்துரை சிறப்புப் பேட்டி

வீடு, நிலம், தங்கம், வங்கிக் கையிருப்பு என அசையும், அசையாச் சொத்துகள் எதுவும் இல்லாமல் மக்களையும் ‘தோழர்’களையும் மட்டுமே நம்பித் தேர்தலில் களம் காண்கிறார் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் எம்.சின்னத்துரை.

படித்தது 10-ம் வகுப்பு, பார்ப்பது முழுநேரக் கட்சிப் பணி. அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீட்டில், விவசாயக் கூலியாக 100 நாள் வேலைக்குச் செல்லும் மனைவி, டெம்போ ஓட்டும் மகனுடன் நிறைவாய் வாழ்ந்து வருகிறார் சின்னத்துரை. இன்னொரு மகன் பொறியியல் முடித்துவிட்டு பணிக்காகக் காத்திருக்கிறார்.

18 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக மக்கள் பணியாற்றிவரும் சின்னத்துரை, ‘இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

குடும்பத் தேவைகளைத் தானே பொறுப்பேற்று நடத்தும் சூழலில் மனைவி, உங்களின் பணிச் சூழலை எப்படி ஏற்றுக் கொண்டார்?

மனைவிதான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறார். திருமணமானபோதே அவர் என்னைப் புரிந்துகொண்டார். போராட்டங்களுக்கு நான் செல்லும்போது எந்த எதிர்ப்பும் இல்லாமல் வழியனுப்பி வைப்பார். தேவைப்பட்டால் போராட்டங்களில் கலந்துகொள்வார். கட்சியின் நேர்மை, மரியாதை மீது நம்பிக்கை வைத்து இதுவரை எனது எந்தச் செயல்பாடுகளுக்கும் அவர் எதிர்ப்பு காட்டியதில்லை.

தேர்தல், பிரச்சாரம் என்றாலே செலவுதான். எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

அவற்றைக் கட்சியே பார்த்துக் கொள்ளும். இதுபோகத் தோழர்கள் கடுமையாக உழைத்து, நிதி சேகரித்து வருகிறார்கள். சீர்வரிசை கொடுப்பது போலத் தாம்பாளத் தட்டில் வைத்து மக்கள் எங்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இதைத்தான் மக்களுக்காக உழைத்ததற்குக் கிடைத்த பரிசாக நினைக்கிறேன்.

இது வெற்றியைச் சாத்தியமாக்குமா?

நிச்சயமாக வெற்றி வசமாகும் என்று நம்புகிறேன். நான் வேட்புமனுத் தாக்கல் செய்யச் செல்லும்போது மக்களுக்கு எந்த உதவியோ, பணமோ, பொருட்களோ, வாகன வசதியோ செய்து கொடுக்கவில்லை. ஆனால், பொதுமக்கள் அலைகடலெனத் திரண்டிருந்தார்கள். அதை வைத்தே நான் புரிந்துகொண்டேன்.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு எப்படி இருக்கிறது?

பிற தொகுதிகளைப் போல் அல்லாமல், கூட்டணிக் கட்சியினர் அனைவரும் சூழலைப் புரிந்துகொண்டு, உணர்வுபூர்வமாக வேலை செய்கிறார்கள். உணவு, போக்குவரத்து, எரிபொருள் செலவுகளைத் தாங்களே முன்வந்து ஏற்று, முகம் சுளிக்காமல் பணியாற்றுகிறார்கள். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற உணர்வுடன் திமுகவினர் களப் பணியாற்றுவதைப் பார்க்க முடிகிறது.

தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன? எப்படிச் சரிசெய்வீர்கள்?

கந்தர்வக்கோட்டையில் ஒரேயொரு சாராயத் தொழிற்சாலை மட்டும்தான் உள்ளது. அங்கும் பெரிதாக வேலைவாய்ப்பு இல்லை. நிலத்தடி நீரும் 400 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. காவிரி – வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். இதற்காகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம்.

இதுவரை எங்கள் மக்களின் குடிமனைப் பட்டா பிரச்சினை தீரவில்லை. பல கிராம மக்கள் இன்னும் புறம்போக்கு நிலங்களில்தான் வாழ்கின்றனர். பட்டா இருந்தால் இடம் இல்லை, இடம் இருந்தால் பட்டா இருப்பதில்லை. அதேபோல உள்ளார்ந்த கிராமங்களில் தண்ணீர், சாலை, பேருந்து வசதி இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

10 ஆண்டுகளாக அதிமுக எம்எல்ஏ பொறுப்பில் இருந்தாலும், தொகுதிக்கு அதிகம் வருவதில்லை. இதனால் மக்கள் பிரதிநிதியைச் சந்திக்க முடியாத அதிருப்தி மக்களிடம் நிலவுகிறது. அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்ய, உங்களை மாதிரியான ஆட்கள் வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.

கீரனூரில் கிரானைட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக் காடுகள் இருந்தும் இதுவரை கந்தர்வக் கோட்டையில் முந்திரித் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க சட்டப்பேரவையில் என் குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன்.

நாளுக்கு நாள் கம்யூனிஸ்ட்டுகளுக்கான வரவேற்பு குறைவது ஏன்?

கட்சியின் செல்வாக்கு குறையவில்லை. கம்யூனிசக் கொள்கைகள் மீது மக்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. இன்றைய அரசியல் பணமயமாகியுள்ள சூழலில், சாதி ரீதியான அரசியலுக்கு முக்கியத்துவம் கூடுகிறதே தவிர சித்தாந்த அரசியலுக்கு இல்லை. கார்ப்பரேட் அரசியல் உருவாகிவிட்டது. இவை அனைத்தும் சேர்ந்துதான் இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதே நிலை நீடிக்காது. கேரளாவில் கட்சி மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டபோதும், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோம். சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

கம்யூனிஸ்ட்டுகள் சார்பில் இதுபோன்ற உதாரணங்களைக் கொடுக்க, கேரளா மட்டும்தானே எஞ்சியிருக்கிறது?

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. திரிபுராவிலும் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல மாற்றம் ஏற்படும். பிஹாரில் இடதுசாரிக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள்தான் அப்போதைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.

அதீத பலத்துடன் வளர்ந்துவரும் பாஜகவை எதிர்க்கப் போதிய பலம் இருக்கிறதா?

பாஜகவின் அரசியல் உத்தி எல்லாக் காலத்துக்கும் நீடிக்காது. வேளாண் சட்ட விவகாரம் இந்தியா முழுவதும் தேர்தலில் எதிரொலிக்கும். குறிப்பாக இந்தச் சட்டங்களால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். தற்போது 5 மாநிலத் தேர்தல்களிலும் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்காது. பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியிருந்த, 2 கோடிப் பேருக்கு வேலை, ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் நிவாரணம் என எதையும் நிறைவேற்றவில்லை. அதனாலேயே கடவுள் நம்பிக்கை என்று மக்களைத் திசைதிருப்புகின்றனர்.

மக்களுக்குக் கடவுள் மீது அளப்பரிய நம்பிக்கை இருந்தாலும் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சிதான் முக்கியம். கரோனா காலத்தில் மக்கள் பெரிதும் துயரப்பட்டனர். இந்தியா இரண்டாகப் பிரிந்து கார்ப்பரேட்டுகளுக்காகவும் ஏழைகளுக்காகவும் மாறிவிட்டது. இதில் கார்ப்பரேட்டுகளுக்கான இந்தியாவில்தான் மோடி இருக்கிறார். அவருக்கு மக்களின் ஆதரவு இருக்காது. பாஜகவை முன்பிருந்த அதே பலத்துடன் எதிர்ப்போம்.

ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்துவிட்டு, இப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க் கட்சியாகவே இருப்பது, களத்தில் இருக்கும் போராளிகளைச் சோர்வடையச் செய்யாதா?

தேர்தல்கள் மூலமாகவே மாற்றம் வரும் என்று எப்போதும் நாங்கள் எதிர்பார்த்ததில்லை. இன்றைய முதலாளித்துவ அரசியல் சூழலில், அதிகாரம் என்னும் வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதை எப்படி மக்களுக்குப் பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறோம்.

தேர்தல் மூலம் சமத்துவம் உருவாகும் என்னும் மாயை எங்களுக்கு இல்லை. எனினும் வாய்ப்பு கிடைக்கும்போது சட்டம் இயற்றுகிற அவற்றில் இடம்பிடித்து, மக்களுக்குச் சேவையாற்றவே தேர்தல் என்னும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம். இதில் எண்ணிக்கை கூடலாம், குறையலாம். இந்திய வரலாற்றில் எதுவுமே நிரந்தரமல்ல. மாற்றம் ஏற்படும். நம்முடைய போராட்டங்கள் வீண் போகாது என்ற அடிப்படையில்தான் கம்யூனிஸ்ட்டுகள் செயல்படுகிறோம்.

கூட்டணி என்பதே பலத்தை அதிகரிக்கத்தான் என்னும்போது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?

எதிர்காலத்தில் இதற்குப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இணைய வேண்டும் என்ற மனோபாவம் வந்திருக்கிறது. இந்திய அரசியல் சூழலைப் பார்க்கும்போது இணைந்தால் மகிழ்ச்சி என்ற மனநிலையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

இரண்டு கட்சிகளும் தற்போது இணைந்து போராட முன்வந்துள்ளதே பெரிய முன்னேற்றம்தான். கட்சித் தலைமை மத்தியிலும் இணைந்து செயல்படும் உணர்வுகள் இருக்கின்றன. விரைவில் இது சாத்தியமாகும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே